Latest Articles

Home Design

திருக்கேதீஸ்வரம் மற்றும் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசேட கட்டளை பிறப்பிப்பு.

திருக்கேதீஸ்வரம் மற்றும் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசேட கட்டளை பிறப்பிப்பு.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய இரு மனித புதை குழிகள் தொடர்பான  விசாரணைகளும் இன்றைய தினம் புதன்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் குறித்து அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் புதன்கிழமை(16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் வி.எல்.வைத்திய ரெட்ண அவர்களும்,சி.ஐ.டி.உத்தியோகத்தர்களும்,காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணிகளும்,அரச சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

இதன் போது ஏற்கனவே மனித எச்சங்களில் இருந்து பகுப்பாய்விற்கு பிரித்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்ற கட்டுக் காவலில் இருப்பதாகவும்,அதனை சீ-14 பரிசோதனைக்காக புலோரிடா விற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளுக்காக இன்று (16) வைத்தியரினால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள நீதிமன்றத்தினால் கட்டளை ஒன்று ஆக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வைத்தியர்கேவகையினால்  ஏற்கனவே எடுக்கப்பட்ட  மனித எச்சங்களின் மாதிரி களுக்கான அறிக்கை இன்றைய தினம் புதன்கிழமை (16) மன்றில் சமர்ப்பிக்கப்பட இருந்தது.எனினும் அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால் குறித்த அறிக்கையை எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி (21-11-2024) தாக்கல் செய்வதாக தவணை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் குறித்த அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும்.அத்தோடு குறித்த மாதிரிகள் சீ-14 பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும்.இந்த நிலையில் குறித்த திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி திகதி அழைக்கப்பட உள்ளது.

மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான விசாரணை

 மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு இந்த மாதம் 7 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை வைத்தியர் ராஜபக்ஷ குழுவினராலும்,ராஜ் சோமதேவ குழுவினராலும் ஏற்கனவே ஏற்கனவே மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு பொதி   பொதி செய்யப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பொதிகளில் இருந்து மனித எலும்புக் கூட்டுத் தொகுதி தனியாகவும், அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் குறித்த 5 நாட்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரித்து எடுக்கப்பட்டு,பொதி செய்யப்பட்டன.

பிர பொருட்கள் ராஜ் சோமதேவ  தலைமையிலான குழுவினராலும்,மனித எலும்புகள் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினராலும் பிரித்து எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டது.வைத்தியர் ராஜ் சோமதேவ அவர்களினால் சதோச மனித புதை குழியை சுற்றி நான்கு இடங்களில் பரீட்சார்த்தமாக தோண்டிப் பார்த்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த பொதிகள் தொடர்பான விசாரணை இன்று புதன்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது அரச சட்டத்தரணிகள்,காணமல் போனர் அலுவலக உத்தியோகத்தர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.இதன் போது நீதிமன்றத்தினால் சில கட்டளைகள் ஆக்கப்பட்டது.

வைத்தியர் கேவையினால் பகுப்பாய்வு செய்யப்பட இருக்கின்ற மனித எச்சங்கள் ,இறப்புக்கான காரணம்,பாலினம்,அதற்கான வயதெல்லை போன்ற விடையங்கள் சம்மந்தமான அறிக்கை  தயாரிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க  இட வசதிகள் காணாமல் உள்ளமையினால் நீதிமன்றத்தில் இருந்து ஒரு கட்டளை ஒன்றை ஆக்குமாறு கேட்கப்பட்டது.அதற்கான கட்டளை இன்று மன்னார்  நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அத்தோடு ராஜ் சோமதேவ அவர்களும் எடுக்கப்பட்ட பிற பொருட்களில் இருந்து அதற்கான காலப்பகுதி என்னவாக இருக்கும் என்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க கேட்கப்பட்டிருந்தது.

அத்தோடு மேலதிகமாக சதோச மனித புதை குழியை மீண்டும் தோண்ட வேண்டுமா? அல்லது அதனை பாதுகாக்க வேண்டுமா? என்பது தொடர்பான அபிப்பிராயங்களை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களாலும் சட்ட வைத்தியர் ராஜபக்ஷ அவர்களினாலும் அறிக்கை ஒன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையும் மீண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற உள்ளன.அத்தோடு,குறித்த பொருட்கள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு கட்டளை ஒன்று ஆக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia