எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியினை சேர்ந்த வன்னி மாவட்ட வேட்பாளர் ப.உதயராசா மற்றும் மூவரால் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட சிலர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தாம் வன்னி மாவட்டத்திற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வேட்புமனுவை கையளித்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த வேட்புமனு முறையாக முன்வைக்கப்படவில்லை என குறிப்பிட்டு அதனை ஏற்றுக்கொள்வதை அவர் நிராகரித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ஆவணங்களும் முறையாக முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்பதால் அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் ரிட் எழுத்தாணையை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை வன்னி மாவட்டத்திற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பை இடைநிறுத்தும் இடைக்கால தடையுத்தரவையும் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.
JOURNALIST Parameswaran Kartheeban
No comments
Post a Comment