தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டுசெயற்ப்படுவதாக வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்….
இம்முறை தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வேட்பாளர்கள் பேரம்பேசக்கூடிய ஒருசக்தியாக மக்களின் நன்மைகருதி ஒன்றிணையவில்லை. ஆசனங்களை பெறுவதனை மாத்திரம் நோக்கமாக கொண்டு ஏட்டிக்கு போட்டியாக தனித்தனியாக தேர்தலில் நிற்கின்றனர். இப்படி நின்று யாருக்காக நீங்கள் கதைக்கப்போகின்றீர்கள்.
நீங்கள் ஒரு அணியாக எப்போதாவது திரண்டிருக்கிறீர்களா. உங்களுக்குள்ளேயே போட்டியிட்டு குழப்பங்களை ஏற்ப்படுத்தி கட்சிகளை பிளவுபடுத்தி தமிழ்த்தேசியத்தையே இன்று இல்லாது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை ஒன்றிணைத்து கலந்துரையாடி ஒற்றுமையாக எப்போது பயணித்துள்ளீர்கள்.
இந்த தேர்தலில் அதிகரித்துள்ள சின்னங்களால் தமிழ் மக்கள் குழப்பநிலையை அடைந்துள்ளனர். சங்கு,வீடு சுயேட்சை, சைக்கிள் என்று பலகட்சிகள். பல சுயேட்சைகுழுக்கள் போட்டியிடுகின்றது.
இதனால் அரசியலை பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலமையே இன்று ஏற்ப்பட்டுள்ளது.
வடக்கில்12 ஆசனங்களை பெறுவதற்காக 800 ற்கும் மேற்ப்பட்டவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் வாக்களிப்பது. நண்பர்கள் உறவினர்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.
இதன் மூலம் சிங்கள கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றும் நிலைமையினை நீங்களே உருவாக்கப்பார்க்கின்றீர்கள்.
பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கிறீர்கள் அதனை மக்களுக்கு வழங்குங்கள்.நீங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு இன்னும் கீழ் நிலைக்கே மக்களை தள்ளப்போகின்றீர்கள். என்று தெரிவித்தனர்.
JOURNALIST Parameswaran Kartheeban
No comments
Post a Comment