Latest Articles

Home Design

புதுச்சேரி வழியாக புயல் இன்று கரையை கடக்கிறது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

புதுச்சேரி வழியாக புயல் இன்று கரையை கடக்கிறது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

சென்னை

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ சிவப்பு எச்சரிக்கை’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி இதற்கு ‘ஃபெஞ்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்துவட தமிழக கடற்கரை பகுதியில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பர் 30-ம் தேதி (இன்று) பிற்பகல் புயலாக கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை: வடதமிழக கடலோரம், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் 50-60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று முழுவதும் 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். 


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia